என்.எல்.சிக்காக பசுமையான விளை நிலங்களை அழிப்பதை எதிர்த்து போராட்டம், பேருந்துகளுக்கு கல்வீச்சு, டயர்கள் எரிப்பு என கடலூர் மாவட்டமே பீதியில் உறைந்துள்ளது.
1957ஆம் ஆண்டு, காமராஜரின் முயற்சியால், பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட என்.எல்.சி இந்தியா நிறுவனம், நாளொன்றுக்கு சுமார் 6000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருவதோடு, கடந்த 2021-22ஆம் நிதியாண்டில், 12,545.96 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக திறந்த வெளி சுரங்கங்களை விரிவுபடுத்தவும், புதிய சுரங் கங்களை ஏற்படுத்தவும், நிலங்களைக் கையகப் படுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த 18.08.2022 அன்று முதலாவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், ஏக்கருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு, வேலைக்கு பதிலாக 12 லட்சம் வரை வாழ்வாதாரத்தொகை (பணப்பலன்கள்) அல்லது மாதம் பத்தாயிரம் ஊக்கத்தொகை எனப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது என்.எல்.சி.
ஆனால், என்.எல்.சி கடந்த காலங்களில் நிலங் களைக் கையகப்படுத்தியதற்கு வழங்கவேண்டிய நியாயமான இழப்பீட்டுத் தொகை, நிரந்தர வேலை ஆகியவற்றை இதுவரை வழங்கவில்லையென்றும், என்.எல்.சி.க்கான பொறியாளர் தேர்வில் 299 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லையென்பதையும் சுட்டிக்காட்டி, என்.எல்.சி. குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கர் ஒன்றுக்கு 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். பா.ம.க.வோ, "எடுத்த நிலம்வரை போதும், கொடுத்த சலுகைகள்வரை போதும். இனியும் நிலம் எடுப்பதை அனுமதிக்கமாட்டோம். ஏற்கெனவே எடுத்த நிலங்களில் கிடைக்கின்ற நிலக்கரியை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும்வரை செய்யட்டும், அதற்குப் பிறகு மூடிவிட்டுச் செல்லுங் கள்' என்று விடாப்பிடியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
கடந்த 2000, 2006, 2015 ஆண்டுகளில் வளையமாதேவி, சாத்தப்பாடி, கம்மாபுரம், ஊ.ஆதனூர், கரிவெட்டி, கத்தாழை, மும்முடிச் சோழகன் உள்ளிட்ட 10 கிராமங்களில் நிலங்கள் கொடுக்க ஒப்பந்தம் செய்துகொண்ட விவசாயி களுக்கு அப்போது 6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங் கப்பட்டது. தற்போது அவர்களும் ஏக்கருக்கு 25 லட்சத்துக்கு சமமான இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் இறங்கி யுள்ளனர். அதேசமயம் 2006-ல் நிலம் கையகப்படுத்த ஒப்பந்தம் போடப் பட்ட நிலங்களைத் தொடந்து விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கு ஏற்கெனவே 6 லட்சம் வரை இழப்பீடு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக கருணைத் தொகை யாக 3 லட்சம் வழங்கப்படுகிறது.
தற்போது என்.எல்.சி.யின் இரண்டா வது சுரங்க விரிவாக்கத்திற்காக 2,500 ஏக்கர் நிலம் தேவைப்படுவதால் இந்த நிலங் களைக் கையகப்படுத்தும் வேலையில் என்.எல்.சி. தீவிரம் காட்டியுள்ளது. கடந்த 25ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் இழப்பீடு தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதற்கு ஒருதரப்பினர் ஆதரவும், மறுதரப்பில் கடும் எதிர்ப்புமாக உள்ளது.
இந்நிலையில், 25ஆம் தேதி இரவோடிரவாக வளையமாதேவி பகுதிக்கு ராட்சத பொக்லைன் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. 500க்கும் மேற் பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதுமட்டு மில்லாமல், கலவரம் ஏற்பட்டால் தடுக்கும் வகையில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. 26ஆம் தேதி விடியற்காலை, அனைவருக்கும் பேரிடியாக விடிந்தது. இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மேல் ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் இறக்கப்பட்டு, நெற்கதிர்களை துவம்சம் செய்து சுரங்கம் அமைய வுள்ள பகுதி வழியாகச் செல்லும் பரவணாற்றின் திசையை மாற்றியமைக்கும் பணிகள் அசுர வேகமாகத் தொடங்கின.
புதிய வழித்தடமாக, வளையமாதேவிலிருந்து மேலகொளக்குடி அருகே சென்று திரும்பிச் செல்லும் விதமாக வாய்க்கால் வெட் டும் பணி நடந்தது. இதனைத் தடுக்க வந்த விவசாயி களை போலீசார் அருகிலேயே விடவில்லை. நெற்கதிர்கள் நாசமாவ தைக் கண்ட பெண்கள், மண்ணை வாரியிறைத்து கண்ணீர் விட்டுக் கதறினர். இதையறிந்து வந்த பா.ம.க. கடலூர் தெற்கு மாவட்ட செய லாளர் செல்வ.மகேஷ் தலைமை யிலான கட்சியினர், சேத்தியாத் தோப்பில் தடுத்து நிறுத்தப்பட்டதால், குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்தனர். அவர்களைக் கைதுசெய்த போலீசார், மண்டபத்தில் அடைத் தனர். இதனையடுத்து மாவட்டம் முழுக்க பதற்றம் பற்றிக்கொண்டது. கடலூர், விருத்தாச்சலத்தில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். "விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் காக்க எந்த எல்லைக்கும் சென்று போராட பா.ம.க தயாராக இருக்கிறது'' என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அரண்மொழித் தேவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டம் வலுத்ததில், 17 அரசு பேருந்துகள் கல்வீசித் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு, முத்தாண்டிக் குப்பம், கண்ணுத்தோப்பு பாலம் கொள்ளுகாரன் குட்டை விருத்தாச்சலம் ஆகிய 5 இடங்களில் சாலை நடுவே டயர்களை போட்டு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். போராட்டம் குறித்து வளையமாதேவியை சேர்ந்த விவேக், "நிலம் கொடுக்கும் மக்களுக்கு நிரந்தர வேலை, அதிகபட்ச இழப்பீடு என்றுதான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அரசாங்கமும், என்.எல்.சி. நிர்வாகமும் எங்கள் குரல்களை காதில் போட்டுக் கொள்ளவில்லை. போராடும் கிராம மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது. திடீரென ஆயிரக்கணக் கான போலீசாரை ஊரில் குவித்து, அடக்கு முறைகளைக் கையாண்டு நிலங்களைக் கையகப்படுத்துகிறார்கள். பரவனாற்றுக்கு அந்தப் பகுதியில் 250 ஏக்கருக்கு மேல் நான்கு கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் உள்ளன. ஆற்றினை திசை மாற்றுவதால் விவசாய நிலங் களுக்கு செல்ல முடியாது. அதுமட்டுமில்லாமல், குடியிருப்புக்கு அருகாமையிலேயே சுரங்கம் வெட்டத் திட்டமிடுகிறார்கள். மத்திய, மாநில அரசாங்கங்கள், என்.எல்.சிக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார்கள்'' என குமுறுகிறார்.
இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறுகையில், "புவனகிரி தாலுகா வளையமாதேவி மற்றும் 4 கிராமங்களின் வழியாக பரவனாறு செல்கிறது. என்.எல்.சி. விரிவாக்கப் பணிக்காக பரவனாற்றில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. என்.எல்.சி.யால் 6 கிராமங்களில் 348 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலங்களின் உரிமையாளர்கள் என்.எல்.சி.க்கு நிலங்களை ஒப்படைக்காமல் விவசாயம் செய்து வந்தனர். இதனால் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. 2006 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்டிருந்த நிலங்களுக்கு தற்போது 16 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. என்.எல்.சியில் மின் உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய கலெக்டரால் விவசாயிகளிடம் பரவனாறு பகுதியில் பயிர் சாகுபடி செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. அந்த மாற்றுப் பாதைக்கு 30 ஹெக்டேர் இடம் தேவைப்படுகிறது. இதற்கான இழப்பீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில், வேளாண்மைப் பயிர்கள் சேதமடைந்தால் உரிய இழப்பீட்டுத் தொகை என்.எல்.சி. நிறுவனத் திடமிருந்து பெற்றுத் தரப்படும்'' என்றார்.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி, வெள்ளியன்று, என்.எல்.சி. 2வது சுரங்க விரிவாக்கப் பணிகளைக் கைவிட வலியுறுத்தி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை யிடும் போராட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். போராட்டத்தில், "பல கோடி கொடுத்தாலும் நிலத்தை தரமாட்டோம்'' என உணர்ச்சிகரமாகப் பேசிய அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி. நிறுவனத்துக்குள் நுழைய முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.
அப்போது பா.ம.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், போலீசார்மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து, போராட்டக் காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தைக் கலைத்தனர். மேலும், வானத்தை நோக்கி மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போராட்டம் கட்டுக்குள் வந்தது. முன்னதாக, கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
-சுந்தரபாண்டியன்